பரங்கிப்பேட்டை:வெள்ளாற்று முகத்துவாரத்தை ஆழப்படுத்தக் கோரி பரங்கிப்பேட்டை
விசைப்படகு பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்த 12 கிராம மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்
பிடிக்க செல்லாமல் மறியல் நடத்தினர்.பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் அடுத்த வெள்ளாற்று முகத்துவாரத்தின் வழியாக பரங்கிப்பேட்டை, புதுக்குப்பம், புதுப்பேட்டை, சாமியார்பேட்டை, சின்னூர், முடசல்ஓடை, கிள்ளை, பில்லுமேடு, எம்.ஜி.ஆர்., திட்டு உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வந்தனர்.
முகத்துவாரம் அடிக்கடி தூர்ந்து போனதால் அரசு சார்பில் 10 கோடி ரூபாய் செலவில் நிரந்தரமாக ஆழப்படுத்தப்பட்டது. இருந்தும் ஆறு மாதத்தில் மீண்டும் தூர்ந்தது.
இதனால் கிள்ளை, பரங்கிப்பேட்டை கடற்கரையோர மீனவர்கள் விசைப் படகுகளில் கடலுக்குச் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர்.
சில நேரங்களில் முகத்துவாரத்தில் படகுகள் சிக்கிக் கொள்வதும் வேறு படகுகளைக் கொண்டு சென்று சிக்கிய படகுகளை கயிறுக்கட்டி கரைக்கு இழுத்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக முகத்துவாரம் முற்றிலுமாக தூர்ந்ததால், பரங்கிப்பேட்டை, கிள்ளை, முடசல் ஓடை பகுதி மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன் பிடிக்கச் செல்லவில்லை. தற்போது லம்பாடி இன்ஜின் பொருத்திய படகுகள் மட்டும் கடலுக்குச் செல்கின்றன.
வெள்ளாற்று முகத்துவாரத்தை நிரந்தரமாக ஆழப்படுத்தித் தரக்கோரி நேற்று பரங்கிப்பேட்டை விசைப்படகு பாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்த பரங்கிப்பேட்டை, புதுக்குப்பம், புதுப்பேட்டை, சாமியார்பேட்டை, சின்னூர் உட்பட 12 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் மறியல் நடத்தினர்.
இதனால் அந்த பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனால் தங்கள் படகுகளை அன்னங்கோவில் கடற்கரையோரம் வரிசையாக நிறுத்தி வைத்திருந்தனர். கடல் சீற்றம் காரணமாக சாமியார்பேட்டை மீனவர்கள் நேற்று 2 வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக