செவ்வாய், 16 ஏப்ரல், 2013

குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பதில் இந்தியா பின் தங்கியுள்ளது!

புதுடெல்லி:இந்தியாவில் 197 மாவட்டங்கள் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பதில் மிகவும் பின் தங்கியுள்ளதாக ஏசியன் செண்டர் ஃபார் ஹியூமன் ரைட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்(அப்ஸா) அமலில் இருக்கும் 91 மாவட்டங்களிலும், இடதுசாரி தீவிரவாதம் வலுவடைந்துள்ளதாக அரசு கூறும் 106 மாவட்டங்களிலும் போலீசும், பாதுகாப்பு படையினரும் வயதை பார்க்காமல் இளம் வயதினரை கைதுச் செய்து துன்புறுத்தி வருகின்றனர். அஸ்ஸாம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், நாகலாந்து, திரிபுரா, ஜம்மு-கஷ்மீர் ஆகிய மாநிலங்களில் அப்ஸா அமலில் உள்ளது. ஆந்திரபிரதேசம், பீகார், சட்டீஷ்கர், ஜார்கண்ட், மத்தியபிரதேசம், மஹராஷ்ட்ரா, ஒடீஷா, உ.பி, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இடதுசாரி தீவிரவாதம் வலுவாக வேரூன்றியுள்ளதாக அரசு கூறுகிறது.
ஜம்மு-கஷ்மீர் மாநிலத்தில் குறைந்தது பருவ வயதை அடையாத 15 பேரையாவது என்கவுண்டர் என்ற பெயரில் பாதுகாப்பு ராணுவம் கொலைச் செய்துள்ளது. 21 வழக்குகளில் பருவ வயதை அடையாதவர்கள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர் என்று செண்டர் இயக்குநர் ஸுஹாஸ் சக்மா கூறுகிறார். 16 மாநிலங்களில் உள்ள 181 மாவட்டங்களில் பருவ வயதை அடையாதவர்களை தங்கவைக்கும் தனியாக ஸ்தாபனங்கள் எதுவும் இல்லை. இது ஜுவைனைல் ஜஸ்டிஸ் சட்டத்திற்கு எதிரானதாகும். ஜம்மு கஷ்மீரில் கூட 2 ஜுவைனல் ஹோம் மட்டுமே உள்ளன. பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஜுவைனைல் ஆணையம் பொதுவாகவே செயலற்றதாகவே உள்ளது.
ஜார்கண்டில் 3500 வழக்குகள் ஜுவைனல் ஆணையத்தின்  பரிசீலனையில் உள்ளன. பெரும்பாலும் பருவ வயதை அடையாதவர்கள் பாதுகாப்புச் சட்டங்களின் படி கைதுச் செய்யப்படுகின்றனர். ஜம்மு-கஷ்மீரில் போலீஸ் மீது கல்வீசியதால் 14 வயதான ஃபைஸல் ரஃபீக் ஹக்கீம் முன்னெச்சரிக்கை காவல் சட்டத்தின்படி கைதுச் செய்யப்பட்டுள்ளான். மக்கள் எதிர்ப்பை தொடர்ந்து உமர் அப்துல்லாஹ் அரசு ஹக்கீமை பல மாதங்கள் கழித்து விடுதலைச் செய்தது. அஸ்ஸாமில் 13 வயதான ரகால் கவுரை போலி என்கவுண்டரில் சி.ஆர்.பி.எஃப் படையினர் கொலைச் செய்ததாக ஏசியன் செண்டரின் அறிக்கை கூறுகிறது. பின்னர் அஸ்ஸாம் மாநில மனித உரிமை கமிஷன் இவ்விவகாரத்தில் தலையிட்டதன் விளைவாக அரசு கவுரின் குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியது.
ஆனால்,சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான சி.ஆர்.பி.எஃப் படைவீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆந்திர பிரதேச மாநிலம் வாரங்கலில் 14 வயதான புத்தி சுவாதீனம் இல்லாத சிறுமியை சி.ஆர்.பி.எஃப் படை வீரர்கள் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்திலும் குற்றவாளிகள் மீது விசாரணை நடத்தப்படவில்லை. பொதுவாகவே மாநில அரசுகள் ஜுவைனல் ஜஸ்டிஸ் சட்டத்தை அமல்படுத்துவதில் அலட்சியம் காட்டுவதாக ஏசியன் செண்டரின் அறிக்கை குற்றம் சாட்டுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக