செல்வந்தர்கள் அல்லாஹ்வுடைய பாதையில் செலவழிக்காமல், நன்றி செலுத்தாமல் மென்மேலும் செல்வத்தை சேர்த்துக் கொண்டிருப்பதையும், ஏழைகள், இறைவன் தனக்கு கொடுத்ததை கொண்டு சந்தோசமடையாமல், பொறுமை அற்றவர்களாக இருப்பதையும் காண முடிகிறது. இரண்டு நிலைகளிலும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று நபியவர்களிடம் அழகிய முன்மாதிரி உள்ளது.
அனைவரும் இறைவனின் அருட்கொடைகளை பெற்றுக் கொள்கிறோம். ஆனால் அதிகமானோர், தேவையுடையவர்களைப்பற்றி கவலை கொள்ளாமல், தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் சந்தோசப்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றனர். தன்னிடம் பணம் உள்ளது என்ற அகந்தையின் காரணமாக, பிறரை இகழ்ச்சியுடன் பார்க்கின்றனர். இறைவன் இதுபோன்ற மதிகெட்ட முஃமின்களை இந்த வசனத்திலே எச்சரிக்கை செய்கிறான்.
“ஈமான் கொண்டவர்களே! உங்கள் செல்வமும், உங்களுடைய மக்களும், அல்லாஹ்வின் நினைப்பை விட்டும் உங்களைப் பராமுகமாக்கிவிட வேண்டாம் – எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள். உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள்; (அவ்வாறு செய்யாதது மரணிக்கும் சமயம்); “என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே” என்று கூறுவான்” (அல்-குர்ஆன் 63:9,10)
அதே போல, முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய வாழ்க்கையில், தொடர்ந்து ஈகை குணத்துக்கு ஆதரவாகவும் கஞ்சத்தனத்துக்கு எதிராகவும் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளார்கள் என்பதை பார்க்கும்போது ஆச்சரியமாக உள்ளது.
தினமும் காலையில் வேலைகளுக்குச் செல்பவர்களுக்கு ஒரு விஷயத்தை நபி அவர்கள் ஞாபகப்படுத்துகிறார்கள். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்:
“மக்கள் காலையில் வேலைகளுக்குச் செல்லும் போது, இரண்டு மலக்குகள் வானத்தில் இருந்து பூமிக்கு இறங்கி, பெருந்தன்மையுடன் செலவழிப்பவர்களுக்கு அதிகமான ஊதியத்தையும், கஞ்சத்தனம் புரிபவர்களுக்கு நஷ்டத்தையும் தந்தருள்வாயாக என்றும் பிரார்த்திப்பார்கள்”
“ஹதீஸ் குத்ஸியில் இறைவன் என் அடியார்களே தேவையுடையவர்களுக்கு செலவு செய்யுங்கள் நான் உங்களுக்கு அதிகமாக தருவதற்கு தகுதியுடையவன்” என்று சொல்வதாக நபியவர்கள் அறிவிக்கின்றார்கள். மேலும் நபியவர்கள், அவ்வாறு செலவழிக்கும்போது நியாயமான முறையில் சம்பாதித்ததில் இருந்து செலவழிப்பதயும் வலியுறுத்தி உள்ளார்கள்.
மேலும், செல்வந்தர்கள், ஏழைகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் நமக்கு அழகிய முன்மாதிரியாக உள்ளார்கள். நபியவர்கள் செல்வந்தராக இருந்தபோது இறைவனுக்கு நன்றி கூறுபவராகவரும், ஏழையாக துன்பத்தில் இருந்தபோது பொறுமையையும் கையாண்டார்கள். நபியவர்கள் இளமையாக இருந்தபோது, தன்னுடைய செல்வம் மிகுந்த மனைவியின் வாணிக வியாபாரம் மூலம் செல்வத்தை ஈட்டினார்கள். பிறகு போர்களின்போது அதிகமான் வெற்றிபொருள் கிடைத்தது. ஆனால், இவை அனைத்தையும் தனக்கென எதுவும் வைத்துக் கொள்ளாமல் தேவையுடையவர்களுக்கு கொடுத்து விடுவார்கள். அவர்களுடைய மனைவிகளும் நபியவர்களின் அடிச்சுவட்டை பின்பற்றியே வாழ்ந்தார்கள்.
செல்வந்தராக இருந்த அதே நேரத்தில், தன்னுடைய வீட்டில் பல நாட்கள் உணவு சமைக்கப்படாத நிலையில் பேரீத்தம் பழத்தையும் தண்ணீரையும் குடித்து பொறுமையை கடைபிடித்தார்கள். கடைசி காலத்தில்,தன்னிடமுள்ள ஒரு தங்கககாசை பற்றி அதிக கவலை அடைந்தார்கள். அதை உரியவர்களிடம் சேர்க்கும் வரை அவர்கள் சஞ்சலப்பட்டார்கள். இந்த காசு என்னிடம் இருக்கும் நிலையில் நான் மரணித்தால் என் இறைவனை எப்படி நான் சந்திப்பேன் என்று கூறினார்கள்.
செல்வமிக்கவர்களை ஈகை குணம் உடையரகளாகவும், குறைவாக உள்ளவர்களை பொருமையை மேற்கள்பவர்களாகவும் இறைவன் ஆக்கி அருள்வானாக.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக