நெய்வேலி அனல் மின்நிலையத்தில், பழுப்பு நிலக்கரி தட்டுப்பாடு மற்றும்
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, 150 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு
உள்ளது.மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான, நெய்வேலி பழுப்பு நிலக்கரி மின்
நிலையம், கடந்த நிதி ஆண்டில், 100 சதவீத மின் உற்பத்தியை எட்டி சாதனை
படைத்துள்ளது.இந்த நிலையத்தின் முதல் நிலையில், ஒன்பது அலகுகளில், 600 மெகாவாட்; முதல் நிலை விரிவாக்கத்தின் இரண்டு அலகுகளில், 420 மெகாவாட்; இரண்டாம் நிலையின் ஏழு அலகுகளில், 1,470 மெகாவாட் என, மொத்தம் 2,490 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது. இதில், தமிழகத்திற்கு 1,175 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது.
பாதிப்பு : இந்த நிலையில், நெய்வேலி நிலையத்தின் ஒப்பந்த ஊழியர்கள், 12 ஆயிரம் பேர், கடந்த மாதம் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். பல வாரங்களாக நீடித்த வேலைநிறுத்தம், கடந்த வாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்தது. போராட்டத்தின்போது, நிலக்கரி வரத்து குறைந்ததால், அதன் எதிரொலியாக தற்போது, நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிலக்கரி பற்றாக்குறையால், முதல் நிலையின் ஒன்பதாவது அலகில், கடந்த மூன்று நாட்களாக, 100 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. முதல் நிலையின் இரண்டாவது அலகில், தொழில்நுட்பக் கோளாறால் கடந்த 26ம் தேதி முதல், மின் உற்பத்தி முடங்கியுள்ளது.
மின்வரத்து குறைவு:
இதுகுறித்து, தமிழக மின்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: நெய்வேலி நிலையத்தின் முதல் நிலை ஒன்பதாவது அலகில், நிலக்கரி இருப்பின்றி தற்காலிகமாக உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது அலகில் தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இன்னும் இரு தினங்களில் இரண்டாவது அலகில் உற்பத்தி துவங்கும் என, நெய்வேலி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.தற்போது நிலக்கரி தோண்டியெடுப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளதால், விரைவில் முதல் அலகையும் திறந்து மின் உற்பத்தி செய்து தருமாறு கேட்டிருக்கிறோம். இந்த பாதிப்பால், தமிழகத்திற்கு 150 மெகாவாட் மின்சார வரத்து குறைந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக