செவ்வாய், 28 மே, 2013

சென்னை சுற்றுப்புறங்களில் வீட்டு மனைகளாக மாறிய நீர்நிலைகள்

சென்னை :சென்னையில் விளை நிலங்கள், நீர் நிலைகள் எல்லாம் ஆக்கிரமிக்கப்படுகின்றன. நாளடைவில் அவை மறைந்தே விடுகின்றன.

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாகக் கருதப்படும் தஞ்சை மாவட்டத்தில் நஞ்சை நிலங்கள் வீட்டு மனைகளாக மாறிவரும் அவலம் குறித்து தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் Care Earth Trust என்ற பூமிப் பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனம், சென்னை மாநகரிலும் அதன் சுற்றுப் பகுதிகளிலும் உள்ள நீர்நிலைகள் குறித்து ஆய்வுசெய்துள்ளது.

அத்தகைய குடிமனைத் தேவைகளுக்காக மாற்றப்பட்டுவிட்ட 474 நீர்நிலைகள் அந்த நிறுவனத்தால் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அந்த நீர்நிலைகளில் 43ஐ மட்டுமே இனிமேல் மீட்டெடுக்கக்கூடிய சாத்தியமுள்ளதாக அறக்கட்டளை நிர்வாகி முனைவர் காயத்ரி வெங்கடேசன்  தெரிவித்தார்.

சென்னையில் கிட்டத்தட்ட 430 நீர்நிலைகள் மீட்டெடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டன

மற்ற நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு, அங்கெல்லாம் பல ஆண்டு காலமாக மக்கள் வாழ்ந்து வருவதால் அவற்றை மீட்கமுடியாது, அத்தகைய முயற்சிகளில் இறங்குவதும் தவறு என்று அவர் கூறினார்.

அவ்வாறு மீட்கப்படக்கூடிய நீர்நிலைகள் வட, தென் சென்னை பகுதிகளிலும் மேற்கு சென்னையிலும் உள்ளன.

வருடத்திற்கு ஆறேழு மாதங்கள் அவற்றில் நீர் தங்கும், நீர் வடிந்த பின்னர் அவை பல வகைகளில் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன என்று காயத்ரி வெங்கடேசன் கூறினார்.
அவற்றை மீட்டெடுக்க பல்வேறு ஆலோசனைகளை பூமிப் பாதுகாப்பு அறக்கட்டளை அரசிடம் முன்வைத்துள்ளது.

அடுத்த கட்ட நடவடிக்கைகளில் அரசு இறங்கியிருப்பதாகவும் அந்த நிறுவனம் கூறியது.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக