செவ்வாய், 28 மே, 2013

வெளிநாட்டு வாழ்கையில் இன்பங்களும் , இன்னல்களும்

திண்ணை குழுமம் அருமையான தலைப்புகளில் கட்டுரை போட்டி நடத்திவரும் இவ்வேளையில் தலைப்புகளில் ஒன்றான "வெளிநாட்டு வாழ்கையில் இன்பங்களும் , இன்னல்களும் " என்ற தலைப்பிற்கு ஏற்றவாறு வெளிநாட்டில் இன்பமாக இருக்கலாம் என்று எண்ணி அங்கு சென்றபின் அதற்கு மாறாக இன்னலில் சிக்கி தன் உயிர் நீத்த இலங்கையே சேர்ந்த சகோதரி "ரிசானா'' அவர்களின் பிழைகளை மன்னித்து வல்ல இறைவன் அவருக்கு சுவர்க்கம் அளிக்கவும், மற்றும் பாலஸ்தீன மக்கள் தன் நாட்டில் அமைதியுடன் வாழவும். வல்ல இறைவனிடம் பிராத்தித்தவனாக இக்கட்டுரையே ஆரம்பம் செய்கிறேன்.....
நண்பர்களே... வெளிநாட்டில் இன்பம் அதிகமா ? அல்லது இன்னல் அதிகமா ? என்று கேட்டால் எளிதாக சொல்லாம் ... வெளிநாட்டில் நாம் எதை அதிகம் பெற்றோம் என்பதை அது நாம் அறிந்த ஒன்றே!!! ஆனால் இந்த தலைப்பு இரண்டையும் பதிய வேண்டி உள்ளது.எனவே சில இன்பங்களையும் , சில துன்பங்களையும் (இன்னல்களையும் ) சற்று பார்ப்போம் ....
வெளிநாட்டு வாழ்க்கையும், அங்கு செல்ல காரணமும் :-
வெளிநாடு என்று சொன்னால் நாம் அனைவரும் நினைப்பது அங்கு சென்றால் நம் குடும்பம் நல்ல நிலைமைக்கு வரும் என்ற எண்ணம் ஆனால் அதற்காக நாம் இழப்பதோ அதிகம் , பெறுவதோ மிக குறைவு.. பிறகு நாம் ஏன் செல்ல வேண்டும் வெளிநாடு ? என்று சிந்திப்பவர்கள் நமக்கிடையில் மிக குறைவு அப்படி சில வாலிபர்கள் சிந்தித்தாலும் அந்த வாலிபரின் எதிர்காலம் கெட்டுவிடும் என்ற அச்சத்தை அவனுக்கு ஏற்படுத்துகின்றனர் அவர்கள் பெற்றோர்கள் பிறகு அவன் எண்ணத்தையும் மாற்றிவிடுகின்றனர்..
இன்றைய காலகட்டத்தில் ஒரு வாலிபன் தனது இளநிலை பட்டம் பெற்ற உடனேயே அவன் பெற்றோர்கள் மேல் படிப்பு என்ன படிக்க விரும்புகிறாய்? என்று கேட்பதுக்கு பதிலாக எந்த நாட்டுக்கு வேலைக்கு போக விரும்புகிறாய் என்று கேட்பதையும் நாம் காணமுடியும்.தன் மகன் இறுதி ஆண்டு படிக்கும் போதே சில பெற்றோர்கள் பாஸ்போர்ட்க்கும் விண்ணபித்து விட கூறுகின்றனர் ..

வீட்டுக்கு வீடு ஒரு கிணறு இருக்கிறதோ இல்லையோ ஆனால் வீட்டுக்கு வீடு ஒருவர் வெளிநாட்டில் வசிப்பதை நாம் காணமுடியும்.. அந்த அளவிற்கு நம் முன்னோர்கள் நமக்கு வழி காட்டி விட்டு சென்று உள்ளார்கள் ..
நண்பர்களே நினைத்து பாருங்கள் சில வருடத்திற்கு முன்பெல்லாம் பாஸ்போர்ட் கிடைக்க வயதை அதிகம் காட்டி பிறகு இல்லாத மீசையே வரைந்து புகைப்படம் எடுத்து பாஸ்போர்ட் எடுத்த நிலைமையும் இருந்தது , எதற்க்காக நாம் இவ்வளவு மோகம் கொண்டோம் அயல் நாட்டின் மீது ? ஒரு வேளை வெளிநாடு சென்றால் தான் பெண் வீட்டார் பெண்ணும், வரதட்சனையும் அதிகமாக கொடுப்பார்கள் என்பதற்காகவோ ! சொல்லபோனால் வசதி படைத்தவர்கள் தன் ஹஜ் கடமையே நிறைவேற்ற பாஸ்போர்ட் எடுத்ததைவிட நடுத்தர குடும்பத்தினரின் மகன் அங்கு சென்று வேலை பார்க்க பாஸ்போர்ட் எடுத்த எண்ணிக்கை தான் அதிகம் (நான் உட்பட )
விசாவை எதிர்நோக்கி இருக்கும் நண்பர்களே நீங்கள் இங்கு இருந்தது போன்று அயல் நாட்டில் நன்றாக இருக்கலாம் என்று நினைக்காதீர்கள்" நீங்கள் வெளிநாட்டில் சுகமாக இருக்க நீங்கள் ஒன்றும் அந்நாட்டு மண்ணின் மைந்தர்கள் கிடையாது அயல் நாட்டு அகதிகள் போன்று '' நினைத்து கொள்ளுங்கள்...
பிறகு நான் வெளிநாட்டு வேலைக்கு போவதை தப்பு என்று சொல்லவில்லை முடிந்த வரை தவிர்த்து கொள்ளுங்கள் என்று தான் சொல்கிறேன்.....
நாம் அனைவரும் வெளிநாடு செல்ல ஒரு ஒரு காரணம் இருக்கும் சிலர் தன் வீட்டு கடன் சுமையே குறைக்க இன்னும் சிலர் தன் தங்கை திருமணத்திற்காக, தன் மகன் கல்விற்காக, இது போன்று அனைவருக்கும் ஒரு ஒரு காரணம் இருக்கும் . அந்த காலத்தில் இருந்து சில பெற்றோர்கள் தன் மகனுக்கு மார்க்க விஷயத்தை சொல்லி
வளர்த்தகளோ இல்லையோ ஆனால் வெளிநாடு போனால் கை நிறைய சம்பாரிக்கலாம்.என்று சொல்லி வளர்ப்பதை நாம் காணமுடிகிறது .. அவனுடைய சிறு வயதிலேயே வெளிநாடு போனால் நல்ல சம்பாரிக்கலாம் என்ற எண்ணத்தை பிஞ்சு உள்ளத்தில் விதைத்து விடுகின்றனர். அதிலிருந்து அவனுக்கு வெளிநாட்டின் மீது
மோகம் ஆரம்பிகின்றது ..இது போன்று பல பெற்றோர்கள் தான் சென்றது மற்றும் இல்லாமல் தன் மகனையும் "வாழையடி வாழையாக அயல் நாட்டில் வேலை செய்ய முனைகின்றனர்'' ...
வெளிநாட்டு வாழ்கையில் நாம் பெறும் இன்பங்கள் :-

• உள்ளூரில் சில சாதாரன வேலைகளுக்கு சம்பளம் மிக குறைவு. ஆனால் வெளிநாட்டில் சிலவற்றை தியாகம் செய்தாலும் சம்பளம் ஊரை காட்டிலும் சற்று அதிகம் பெறுகிறோம் .. இது மட்டுமின்றி உள்ளூரில் மூன்று வருடம் உழைத்து சம்பாதிக்கும் பணத்தை வெளிநாட்டில் சொற்ப மாதங்களில் நாம் சம்பாதித்து விடலாம் , பிறகு இதன் மூலம் கிடைக்கும் பணத்தில் பெற்றோர் மருத்துவ சிலவு , பிள்ளைகளின் படிப்பு மற்றும் குடும்ப சிலவு அனைத்தயும் ஈடு செய்ய முடிக்கின்றது. இதன் மூலம் குடும்பம் கஷ்டபடாமல் வாழ்வதை கண்டு அடையும் சுகம் சொல்லவே முடியாது . பெரும்பாலனோர் இந்த சுகத்தை அடையத்தான் வெளிநாடு செல்கின்றனர் .

• இன்னும் சிலருக்கு தான் சம்பாரித்த பணத்தின் மூலம் ஹஜ் கடமையும், உம்ரா சென்று வரவும் முடிகின்றது இதை எண்ணி சிலர் மகிழ்ச்சி அடைகின்றனர் ஆனால் ஏழை குடும்பத்தை சேர்ந்த ஒருவர் ஊரில் இருந்து மக்காவிற்கு வர வாய்ப்பு மிக குறைவு. காரணம் அவர் பொருளாதார நிலை , ஆனால் அவர் வளைகுடாவில் வேலையில் இருந்தால் உம்ரா செல்ல வாய்ப்பு கிடைக்கும் இதை விட என்ன இன்பம் வேண்டும் நமக்கு என்று சொல்ல கேட்டு இருக்கிறோம் ..

• இன்னும் சில இளைனர்களுக்கு தன் திருமணத்திற்கு மஹர் கொடுக்கவும் , திருமணத்தை தன் சொந்த செலவில் நடத்தவும் அவர்கள் வெளிநாட்டில் சம்பாரித்த பணம் பெரிதும் உதவுகிறது..
வெளிநாட்டு வாழ்கையில் நம்மால், நம் குடும்பம் பெறும் இன்பங்கள் : -

• ஒரு சிலர் குடும்ப கவுரவத்திற்காக சற்று மதிப்பு குறைந்த வேலையே உள்ளூரில் செய்ய மாட்டார்கள் காரணம் உறவினர்களிடையே நன்மதிப்பு கெட்டு விடுமோ! என்ற அச்சத்தில் கூட இருக்கலாம் அத்தருணத்தில் கடன் சுமை அதிகரிக்கும் போது குடும்பத்தினர் வருத்தபடவும் செய்கின்றனர். ஆனால் அவர்கள் வெளிநாடு சென்றால் சாதாரண வேலையானாலும் செய்ய தன்னை தயார்படுத்தி கொள்கிறார்கள், காரணம் அவரை அங்கு காண உறவினர்கள் கிடையாது என்பதாலும் எண்ணலாம் காலபோக்கில் அவர் சம்பாரித்து தன் ஊரில் உள்ள கடனை அடைத்தும் தன தேவையே பூர்த்தி செய்யும் நிலைக்கு வந்த பிறகும் புது வீடு கட்டி குடி போகும் ஸ்தானத்திற்கு வரும் போதும் அவர் குடும்பம் மற்றும் உறவினர்கள் அவரை நினைத்து மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கும் காரணம் அவரது வெளிநாட்டு வாழ்கை அவரை திருத்தியதாக கூட எண்ணலாம் .

• சிலர் ஈமான் அற்ற நிலையில் தொழுகைக்காக பள்ளிவாசல் நோக்கி செல்லாதவர்களும் காலபோக்கில் அவரது வெளிநாட்டு வாழ்வில் தன் எண்ணங்களை திருத்தி நாளடைவில் தொழுவதை நாம் காண முடியும் இதை காணும் பெற்றோர்கள் படும் சுகமே தனி ..
வெளிநாட்டு வாழ்கையில் நம்மால், நம் சமூகம் பெறும் நன்மைகள் :-

• வெளிநாட்டில் நல்ல வேலையில் இருந்து நல்ல சம்பளம் பெறும் பட்சத்தில் தம் சமூகத்தில் உள்ள ஏழை மாணவர்களுக்கு மேல் படிப்புக்கும் , கன்னிகள் திருமணத்திற்கும் , முதியோர் மருத்துவ செலவிற்கும் , சில வெளிநாட்டில் வசிப்பவர்கள் ஒரு அமைப்பை உருவாக்கி அதன் மூலம் பல குடும்பங்களுக்கு உதவி செய்து வருவதை நாம் பார்க்கத்தான் செய்கிறோம் ..இந்த உதவிகளை பெற்ற குடும்பங்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சிகளும் அதிகம் தான் ..
சில வாலிபர்கள் வெளிநாட்டில் இருந்த போது பெற்றது ஓன்றுதான் ''
கண்ணீர் மற்றும் பணம் ''ஆனால் இழந்ததையும் , இன்னல்களையும் பட்டியல் இடலாம் அதில் உங்கள் சிந்தனைக்கு சில வரிகள் :-
• வெளிநாட்டில் சிலர் சுகமாக இருந்தாலும் பலர் இன்னல்களில் சிக்கி தவிகின்றனர். சமீபத்தில் சவுதியில் இலங்கையே சேர்ந்த சகோதரி வீட்டு வேலையில் இருக்கும் போது அவர் வீட்டு முதலாளியின் குழந்தை இறந்துவிட்டதிற்கு இவரின் கவன குறைவே காரணம் என்று சொல்லி மரண தண்டனை நிறைவேற்றியது அந்நாட்டு அரசாங்கம் , இந்த இன்னலில் சிக்கி உயிர் நீத்த சகோதரியின் குடும்பம் அவரை பிரிந்து படும் பாடு அல்லாஹ் தான் அறிவான். இது போன்று இன்னல்கள் நிறைய பேர் வாழ்விலும் பல கோணங்களில் பாதிப்புகளை உருவாக்கி தான் தந்து உள்ளன ...
• பெற்றோர்களே சற்று சிந்தியுங்கள் ! உங்கள் மகன் வெளிநாடு சென்றால் நன்றாக இருப்பான் என்று எண்ணுகிறீர்கள் நல்ல எண்ணம் தான் ஆனால் நீங்கள் எண்ணியபடி அவர் நன்றாக தான் உள்ளார் என்று உங்களுக்கு தெரியுமா? பெரும்பாலனோர் தன் சோகத்தை பெற்றோர்களிடம் மறைத்துவிடுகின்றனர். காரணம் அதை சொல்லி ஏன் அவர்களையும் சோகத்தில் ஆழ்த்த வேண்டும் என்று எண்ணி உதாரணதிற்கு உங்கள் மகன் திருமணம் நடைபெற இருக்கும் தருவாயில் அவரின் கூட வேலை செய்யும் ஒருவர் தன் நிறுவன பணத்தை திருடிவிட்டு தன் சொந்த ஊருக்கு திரும்பும் வேளையில் உங்கள் மகன் அதை அறியாமல் அந்த நபருக்கு விமான நிலையம் வரை உதவி செய்து விட்டதால் அதை அந்நாட்டு அரசு குற்றம் என்று கருதி சிறையில் அடைக்கப்பட்டதை நீங்கள் கேள்விபட்டால் நீங்கள் நிம்மதியாக இருக்க முடியுமா இங்கே ? இது போன்று சம்பவங்களையும் நாம் பார்க்கத்தான் செய்கிறோம் .

• ஒரு ஒருவருக்கும் வெளிநாட்டு வாழ்வில் பல இன்னல்கள் இருக்கும் அதை அவர் அவரிடம் கேட்டால் தான் தெரியும். அதுவும் வெளிநாட்டில் வீட்டு வேலை செய்யும் சகோதரர்களை கேளுங்கள் சொல்வார்கள் அவர்கள் தூக்கம் இன்றி தவிக்கும் இன்னல்களை.யும் அவர்களின் தூக்கம் விற்ற காசுகளின் கதைகளையும் ..

• இன்னும் சில மேற்கத்திய நாடுகளில் மொழி வெறி மற்றும் நிற வெறி காரணமாக கொடூர தாக்குதலுக்கு உள்ளாகி தன் உயிரையும் விட்டிருக்கும் சகோதர,சகோதரிகளை தொலைகாட்சி செய்திகளில பார்க்கதானே செய்கிறோம். இது போன்ற இன்னல்களுக்கும் தீர்வுகள் தேடத்தான் படுமே தவிர தெளிவுகள் இல்லை என தான் ஒவ்வொரு நாள் செய்தித்தாள்களும் நமக்கு சொல்லி கொண்டிருக்கத்தான் செய்கின்றன..

• வெளிநாட்டு சுகம் என்று நினைபவர்களே சற்று சிந்தியுங்கள் ! நாம் எத்தனை பேர் தன் குடும்பத்தை விட்டு நாம் பிறந்த ஊரை விட்டு சுகமாக உள்ளோம் ?கடல் தாண்டி வந்து சில காரணத்திற்காக ஏன் அகதி போன்று வேலை செய்ய வேண்டும் அயல் நாட்டில் நாம் சம்பாதித்தது என்னவோ பணத்தை மட்டும்தான். இதில் எத்தனை பேர் தன் மனைவி மற்றும் தன் குழந்தையின் பாசத்தை சம்பாரிக்க முடிந்தது? நம்மில் எத்தனையோ பேர் விமானநிலையத்தில் தன் கண்ணில் கண்ணீருடன் செல்வதை நாம் காண்கிறோம் , அதுவும் திருமணம் ஆகிய புது மாப்பிளை என்றால் சொல்லவே தேவையில்லை கண்ணில் ஆறு தான் ஓடும் விமானநிலைய கழிவறையில் அவரது மணவாழ்க்கையின் கதை கனஅடி முன் நிறுத்தி கண்ணீரை தான் வர வைக்கின்றன .. இப்படி எல்லாம் போய் நாம் அங்கு சுகமாக இருக்க முடியுமா? வெளிநாட்டில் இருந்து வரும் போது உள்ள உற்சாகம் ஏன் வெளிநாடு செல்லும் போது இருப்பது இல்லை ? ஏன் என்றால் அங்கு அதிகம் நீங்கள் அனுபவிப்பது இன்னல்களையே ...

• நாம் வெளிநாடு சென்றால் நம் குடும்பம் சுகமாக இருக்கும் என்று எண்ணி தான் வெளிநாடு செல்கிறோம் ஆனால் உண்மையிலே தன் மனைவிக்கு கொடுக்கும் சுகம் என்ன தெரியுமா ? வருடம் முழுவதும் கைபேசியில் பேசும் சில வார்த்தைகள் தான் அது கூட அற்ப சுகம்..

• சில நண்பர்கள் விசா கிடைத்தால் அதை பற்றி விசாரிப்பதே கிடையாது . விசா கிடைத்தால் மட்டும் போதும் என்ற எண்ணம் பிறகு அங்கு சென்று இன்னலில் சிக்கி தவிப்பது (உதாரணம்) அரபியின் மகள் தகப்பன் பணத்தை எடுத்து விட்டு கார் டிரைவர் மீது பழி சுமத்தி சிறையில் அடைத்தது, இதை போலீஸ் இடம் எடுத்து கூர மொழி தெரியாமல் அவதிபடுவது , அரபி வீடு பிடிக்காமல் தப்பித்து ஓடி வேறு ஒரு அரபியிடம் தலை மறைவாக வேலை பார்ப்பது பிறகு சிறையில் அடைத்து பின் ஊர் வருவது ,சொன்ன வேலை தராமல் பாலைவனத்தில் ஆடு மேய்க்க அனுப்புவது, எதிர் பாரத வகையில் அந்த நாட்டில் புது கார் டிரைவர்கள் விபத்து நிகழ்த்தி சிறைக்கு சென்று அங்கு உதவ ஆட்கள் இல்லாமல் தவிப்பது. இது போன்ற இன்னல்களுக்கு ஆளாகின்றனர் நம் சகோதரர்கள் ... இது தேவைதானா நமக்கு ?

• இன்னும் சில வாலிபர்கள் தூக்கம் இல்லாமல் இரவு , பகலாக உழைத்து பின் தன் திருமண நடைபெற இருக்கும் தருவாயில் தூக்கம் இன்மை காரணமாக மரணிக்கவும் செய்கின்றனர் . இதை போன்று நான் கண்டும் இருக்கிறேன் .. ஆனால் சற்று சிந்தியுங்கள் தன்னை பெற்ற தாய், தந்தை,தன் மையத்தை கூட பார்க்க முடியாதா நிலை என்ன ஒரு கொடுமை இது ! இது ஒருபுறம் இருக்க தான் பெற்ற தாய்,தந்தை ஜனாசவை காண கூட சிலருக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை நாம் யாருக்காக உழைக்கிறோம்?

• தன் மனைவியின் முதல் பிரசவத்தின் போது கணவர் தன் கூட இருக்க வேண்டும் என்று ஒவ்வருடைய மனைவியும் எண்ணுவார்கள் இந்த பாக்கியம் எத்தனை பேருக்கு கிடைக்கும் சிலருக்கு மட்டும் தான் இந்த சிறப்புகள் . ஆனால் பலருக்கோ இந்த பாக்கியம் கிடைப்பது இல்லை . தன் மனைவின் பிரசவத்தின் போது உடல் அங்கே மனம் இங்கே ..

• வெளிநாட்டில் உள்ள நாம் அதிகமானோர் தன் குழந்தை பிறந்த உடன் குழந்தையின் முகத்தை கணிணியிலும் , புகைப்படத்திலும தான் பார்க்கிறோம் ! இது தான் வெளிநாட்டு சுகமோ? இல்லை வேதனை.

• இன்னும் சிலருக்கு விசா கொடுத்த ஏஜெண்ட் சொன்ன சம்பளம் அங்கு சென்ற உடன் கிடைக்காது இதனால் அவர் படும் துன்பம் இருகிறதே சொல்ல முடியாது. காரணம் இங்கு வர அவர்கள் தகுதிக்கு மேல் கடன் பெற்று பின் நகையே விற்று வருகின்றனர். அதை மீட்க முடியவில்லை என்ற அச்சத்தில் சிலர் கோழைதனமாக தற்கொலையும் செய்து கொள்கின்றனர் ? ஏன் வேண்டும் இந்த அவல நிலை நமக்கு?

• தகப்பனுடைய அருகில் இருந்து கண்டிப்பு இல்லாமல் சில பெண்கள் முகநூல் மற்றும் கைபேசி மூலம் அந்நியர்களுடன் பழகி ஊரை விட்டு ஓடவும் செய்கின்றனர்.இதற்கு என்ன காரணம் மார்க்க அறிவும் , தகப்பனின் அருகில் இருந்து கண்டிப்பும் இல்லாததும் , அவர்களை சரிவர கண்காணிப்பதும் இல்லை.

• இஸ்லாம் தன் மனைவியரை ஆறு மாதம் காலம் மட்டும் பிரிய அனுமதி அளிக்கிறது , அதுவும் மனைவி அனுமத்தித்தால் என்று இருக்க சில பேர் ஆறு வருடம் கழித்து வரும் ஆட்களையும் பார்த்து இருக்கிறேன். சில சமயங்களில் இது விவகாரத்துக்கும் ,சில பெண்கள் மற்ற அன்னியருடனும் பழக இவர்களே காரணம் ஆகிவிடுகின்றனர். பிறகு தன் மனைவியரை தனி குடித்தனம் அமர்த்துவதை தவிர்க்கவும் வேண்டும். இப்படி எல்லாம் சம்பாரித்து என்னத்தை கண்டோம் நம் வாழ்வில் சொல்லுங்கள் சகோதர்களே ..

• நண்பர்களே நினைத்து பாருங்கள்! உங்கள் வயதில் எத்தனை வருடம் உங்கள் மனைவியுடன் வாழ்ந்து இருப்பிர்கள்.இது சுகமா ? இல்லை சோகமா ? அடிப்படை வாழ்க்கையே இழந்து விட்டு ஏன் செல்ல வேண்டும் வெளிநாட்டு வேலைக்கு சிந்தியுங்கள் நண்பர்களே...

• இன்னும் சில பெண்கள் சிறிது காலம் தன் கணவருடன் வெளிநாட்டில் வாழ்ந்துவிட்டு சொந்த ஊருக்கு வந்த பின் கொஞ்சம் காசு பார்த்த உடன் தன் உறவினர்களை மதிப்பதில்லை இது சில சமயங்களில் உறவை பிரிக்கவும் வழி வகுக்கிறது ..
இப்படிபட்ட பெண்களே உங்கள் உறவினர்களை வேதனையில் ஆழ்த்தாதிர்கள்..
நபி (ஸல் ) கூறினார்கள் : " யார் தம்முடைய வாழ்நாள் அதிகரிக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ அவர் தன் உறவினர்களை ஒட்டி வாழட்டும் "
இன்னும் சில பெண்கள் தன் அண்டை வீட்டாருடன் சென்று அவர் கணவர் அதிகம் சம்பாதிக்கிறார் என்பதற்காக கணவரை உயர்த்தியும் மற்றவர்களை தாழ்த்தியும் பேசி தற்பெருமை கொண்டு அண்டை வீட்டாரை வேதனை அடையவும் செய்கின்றனர்.
இப்படிபட்ட பெண்களே உங்கள் அண்டை வீட்டாரை வேதனை அடைய செய்ய வேண்டாம்.
நபி (ஸல் ) கூறினார்கள் : "யாருடைய உள்ளத்தில் அணு அளவு தற்பெருமை உள்ளதோ அவர் சுவர்க்கம் நுழையமாட்டார் ''
நண்பர்களே வெளிநாட்டில் உள்ள சுகத்தையும் , இன்னலையும் என்னால் முடிந்தவரை கூறிவிட்டேன்..
இவ்வளவு இன்னல்கள் இருக்க நாம் ஏன் அயல் நாட்டின் மீது இவ்வளவு மோகம் கொண்டுள்ளோம் என்று புரியவில்லை நமக்கு!
இதற்கு தீர்வு தான் என்ன ?
சிக்கன வாழ்வையும் தன் சொந்த மண்ணிலே வாழ வேண்டும் என்று எண்ணம் நம்மில் வர வேண்டும் அதுபோல் ஆடம்பர வாழ்க்கையே தவிர்ப்பதும் , அயல் நாட்டின் உள்ள இன்னல்களை தன் பிள்ளைகளுக்கு எடுத்துரைத்தும் , நம் சமுதாயம் கல்வியறிவு பெற செய்வதும், பிறகு சரியான முறையில் சுய தொழில் செய்ய விழிப்புணர்வு கொடுப்பதன் மூலம் வாலிபர்கள் சற்று வெளிநாடு செல்வதை தவிர்க்க சிந்திக்க வைக்க முடியும்.. இது நிரந்தர தீர்வும் ஆகாது.
நண்பர்களே நான் வெளிநாட்டு வேலைக்கு போவதை தப்பு என்று சொல்லவில்லை முடிந்த வரை தவிர்த்து கொள்ளுங்கள் என்று தான் சொல்கிறேன் . அப்படி போகும் பட்சத்தில் தயவு செய்து நன்கு விசாரித்து விட்டு செல்லுங்கள் ..
இன்ஷா அல்லாஹ் முடிந்த வரை அனைவரும் தன் குடும்பத்துடன் நலமுடன் வாழ துஆ செய்கிறேன் ..
இனி நீங்கள் சற்று சிந்தித்து இனிவரும் தலை முறையாவது எங்கு சுகம் உள்ளதோ அங்கு சுகம் காணட்டும் என்று துஆ செய்தவனாக இக்கட்டுரையே முடிவு செய்கிறேன்.
...வஸ்ஸலாம்
முக நூல் திண்ணை குழுமத்தில் நடந்த ட்டுரை  போட்டி யில் பங்குபெற்ற கட்டுரை
இந்த கட்டுரையே நமக்கு அளித்தது
கட்டுரையாளர் :சகோதரர் : முஹம்மத் பதூர் ஜமான்
நன்றி :திண்ணை குழுமம்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக