ஞாயிறு, 26 மே, 2013

சர்ச்சையில் சென்னை அணி, புத்தெழுச்சியுடன் மும்பை அணி – ஐபிஎல் 6 சாம்பியன் யார்?

 கொல்கத்தா:ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி இன்று இரவு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல சென்னை சூப்பர் கிங்ஸ் ஆர்வத்துடன் காத்திருக்கிறது. முதல் முறையாக கோப்பையைத் தட்டிச் செல்ல மும்பை இந்தியன்ஸும் காத்திருக்கிறது.
ஐ.பி.எல் 6வது சாம்பியன் போட்டியில் மோதும் அணிகளை விட அதிகமாக சூதாட்ட விவகாரம் விவாதிக்கப்படும் நிலையில் அதனால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் எப்படியாவது முதல் முறையாக கோப்பையை வெல்ல களம் கண்டுள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் சாம்பியன் ஆவதற்கு பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ்
கடந்த பாதை – தான் ஆடிய 16 லீக் ஆட்டங்களில் 11 ஆட்டங்களை வென்ற சென்னை அணி மும்பை அணியை எளிதில் வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
பலம் – சந்தேகமில்லாமல் சென்னை அணியின் பலமான பேட்டிங் வரிசை தான். மோகித் சர்மாவை தவிர 10 வீரர்களும் சிறப்பாக பேட் செய்ய கூடியவர்கள். முதல் 10 ஓவரில் நிதானமாக ஆடி 60 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் 100 ரன்கள் எடுப்பது பழமையான முறை போல் தெரிந்தாலும் சென்னைக்கு அது வெற்றி பார்முலாவாகவே இருந்துள்ளது. ஹஸ்ஸி மற்றும் ரெய்னாவின் சிறப்பான ஆட்டமும் தோனியின் அதிரடியும் தொடரும் பட்சத்தில் சென்னையை வெல்வது கடினம்.
பலவீனம் – பேட்டிங் அளவுக்கு சென்னை அணியின் பவுலிங் வலுவானது இல்லை என்றாலும் மோசம் என்றும் சொல்ல இயலாது. கொல்கத்தா பிட்ச் சுழல் பந்துக்கு ஒத்துழைக்கும் பட்சத்தில் ஜடேஜா மற்றும் அஸ்வின் சிறப்பாக பந்து வீச வேண்டியது அவசியம். பவுலிங்கை விட பலவீனமானது சென்னையை சுற்றி நிகழும் சர்ச்சைகள் தான்.
திருப்பு முனை – சென்னை அணியை சுழலும் சர்ச்சைகளை அவ்வணி எப்படி எதிர்கொள்ள போகிறது என்பதை பொறுத்தே ஆட்டத்தின் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படும் எனலாம். பொதுவாக இத்தகைய சர்ச்சைகளில் கவனம் செலுத்தும் பட்சத்தில் வெற்றி பெறுவது கடினம். ஆனால் இதையே ஊக்கமாக எடுத்தால் சென்னை மூன்றாம் முறையாக சாம்பியன் ஆவதை யாரும் தடுக்க முடியாது.
மும்பை இந்தியன்ஸ்
கடந்த பாதை – சென்னை அணியை போல் லீக் ஆட்டங்களில் 11ஐ வென்ற மும்பை அரை இறுதியில் சென்னை அணியிடம் மோசமாக தோற்று போனது. ஆனால் லீக் ஆட்டங்களில் இரு ஆட்டங்களிலும் சென்னையை வென்றுள்ளது.
பலம் - மும்பையின் பலமே அதன் பவுலிங் தான், ஹைதராபாத் அணிக்கு அடுத்து சிறந்து பந்து வீச்சாளர்களை கொண்டுள்ள அணி மும்பை என்று உறுதியாக சொல்லலாம். மலிங்கா பழைய அளவு ஜொலிக்காவிடினும் மிட்செல் ஜான்சன் சிறப்பாக பந்து வீசுவதும் ஹர்பஜன் மற்றும் ஓஜாவின் சுழலும் நிச்சயம் மும்பைக்கு பலம் சேர்க்கும்.
பலவீனம்- மும்பையின் தொடக்க ஆட்டக்காரராக சமீபமாக களமிறங்கும் ஸ்மித்தின் அதிரடியும் கார்த்திக், ரோகித் மற்றும் பொல்லார்டின் அதிரடியும் சிறப்பானது என்றாலும் பேட்டிங்கில் ஒவ்வோர் ஆட்டத்திலும் நிலையான தன்மை இல்லாமல் இருப்பது பலவீனமே.
திருப்பு முனை : சென்னை அணியின் விக்கெட்டுகளை கைப்பற்றுவதில் மும்பை பந்து வீச்சாளர்கள் பெறும் வெற்றியும் கடைசி ஓவர்களில் விட்டு கொடுக்கும் ரன்களும் மும்பையின் வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கும் எனலாம்.
மொத்தத்தில் சர்ச்சைகளில் சிக்கியுள்ள சென்னை அணி அதையே ஊக்கமாக கொண்டு போராடுவதை பொறுத்தும் முதல் முறையாக சாம்பியன் ஆக வேண்டும் என்ற மும்பையின் தீவிர முயற்சியின் வேகமுமே நாளைய சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக