வெள்ளி, 31 மே, 2013

கடலூர் மாவட்டத்தில் அங்கீகாரம் பெறாத 44 பள்ளிகளை மூட நடவடிக்கை?

கடலூர்:கடலூர் மாவட்டத்தில் அங்கீகாரம் பெறாமல் இயங்கும் 44 மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகளை மூட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.  
இதுகுறித்து தொடக்கக் கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது: தனியார் பள்ளிகளைப்போல் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வியை தொடங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த கல்வி ஆண்டில், கடலூர் மாவட்டத்தில் 6 அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் மட்டும் ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்பட்டது. இந்த ஆண்டில் 148 அரசு தொடக்கப்பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலும், 20 அரசு நடுநிலைப்பள்ளிகளில் ஒன்று மற்றும் 6-ம் வகுப்புகளிலும் ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்பட உள்ளது.
 அதேவேளையில், அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளை மூடுவதற்கான நடவடிக்கைகளையும் கல்வித்துறை அதிகாரிகள் எடுத்து வருகிறார்கள். கடலூர் மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாமல் இயங்கும் 44 நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளை மூடுவதற்கு கல்வித்துறை அதிகாரிகள் ஆட்சியருக்கு பரிந்துரைத்துள்ளனர். இதுகுறித்து அந்த பள்ளிகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இதில் 6 பள்ளி நிர்வாகங்கள் தாங்களாகவே பள்ளிகளை மூடி விடுவதாக கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். இதுதவிர மற்ற நர்சரி பள்ளிகளையும் மூட அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.  இதுபோன்ற நடவடிக்கைகளால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்தாலும், தரமான கல்வியை அளித்தால் மட்டுமே அதை தக்க வைத்துக்கொள்ள முடியும். அதனால் தரமான கல்வியை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக