புதன், 29 மே, 2013

அண்ணாமலைப் பல்கலை.யில் புதிய முறையில் நுழைவுத் தேர்வு

சிதம்பரம்: அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவம், பொறியியல் மற்றும் வேளாண் படிப்புகளில் சேர "ஆப்டிக்கல் மார்க்கிங் சிஸ்டம் என்ற புதிய முறையில் இந்த ஆண்டு முதல் நுழைவுத்தேர்வு நடத்தப்படவுள்ளதாக பல்கலை., நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை.யில் 2013-14 கல்வி ஆண்டில் எம்பிபிஎஸ்., பிடிஎஸ்., பிபிடி., பிஎஸ்சி நர்சிங்., பிஇ., பிஎஸ்சி விவசாயம், பிஎஸ்சி தோட்டக்கலை படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு, ஜூன் 7,8,9 தேதிகளில் அண்ணாமலைநகர், சென்னை, கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி, திருச்சி ஆகிய 7 மையங்களில் நடைபெறவுள்ளது.
இந்த ஆண்டு நுழைவுத்தேர்வின்போது, மாணவர்களுக்கு "ஆப்டிக்கல் மார்க்கிங் சிஸ்டம்' மூலம் விடைத்தாள்கள் வழங்கப்படவுள்ளது. இந்த தாளில் மாணவர்கள் கருப்பு மற்றும் நீல நிற பால்பாயிண்ட் பேனா மூலம் விடையளிக்க வேண்டும். மேலும் மாணவர்கள் அனுப்பியுள்ள விண்ணப்பத்திலிருந்து புகைப்படம் மற்றும் கையெழுத்தை எடுத்து, அந்த புகைப்படம் மற்றும் கையெழுத்துடன் ஹால் டிக்கெட் அனுப்பப்படவுள்ளது.
ஹால் டிக்கெட் கிடைக்கப் பெறாதவர்கள் குறிப்பிட்ட மையத்திற்கு தேர்வு நாளுக்கு முன் தினம் சென்று, அங்கு அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தில் தாங்கள் விண்ணப்பித்த விண்ணப்பத்தின் நகலை காண்பித்து டூப்ளிகேட் ஹால் டிக்கெட் பெற்று தேர்வு எழுதலாம். இந்த புதிய முறை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதன் முதலாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
நுழைவுத்தேர்வு மையங்கள் குறித்து விண்ணப்பிக்க இறுதி நாளான மே 30-ம் தேதிக்கு பின்னர் பல்கலைக்கழக இணையதளம்  http://www.annamalaiuniversity.ac.in/index1.php என்ற முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்தார் ஷிவ்தாஸ்மீனா.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக