புதன், 14 ஆகஸ்ட், 2013

இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர்..வேற வழியே இல்லாமல் சரணடைந்த பிபி பாண்டே!

அகமதாபாத்: இஷ்ரத் ஜஹான் படுகொலை வழக்கில் தேடப்பட்டு வந்த காவல்துறை அதிகாரி பி.பி.பாண்டே இன்று அகமதாபாத் சிறப்பு சி.பி.ஐ நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
கடந்த 2004-ஆம் ஆண்டு கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான் உட்பட நான்கு அப்பாவிகள் குஜராத்தில் காவல்துறை அதிகாரிகளால் வேண்டுமென்றே நடத்தப்பட்ட போலி என்கவுண்டரில்  சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ இது போலி என்கவுண்டர் தான் என்று உறுதி செய்தது.
இந்த நிலையில் இவ்வழக்கில் குஜராத்  காவல்துறை அதிகாரிகள் பிபி பாண்டே உள்ளிட்டோர் மீதும் ஐபி அதிகாரி ராஜேந்திர குமார் மீதும் சிபிஐ குற்றம்சாட்டியது. இந்த வழக்கில் காவல்துறை அதிகாரி பிபி பாண்டே நீண்டகாலம் தலைமறைவாக இருந்தார். அவர் தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டார்.
இதற்கிடையே கடந்த ஜூலை 28ம் தேதி திடீரென தமக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகக் கூறி மருத்துவமனையில் சேர்ந்தார் பாண்டே. மேலும் முன்ஜாமீன் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் பாண்டேவின் ஜாமீன் மனுவை  நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனிடையே அவர் தம்மை கைது செய்ய தடை கோரி அண்மையில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், 2 நாட்களுக்கு பாண்டேவை கைது செய்ய தடை விதித்ததுடன் இன்று விசாரணை நீதிமன்றத்தில் சரணடைந்து ஆஜராகவும் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் அவர் இன்று அகமதாபாத் சிறப்பு சி.பி.ஐ நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக