கடலூர் மாவட்ட கடற்கரைப் பகுதியில் மாயமான கடலோர காவல் படை விமானத்தை 3-ஆவது நாளில் ஒலி அலைகள் மூலமாக தேடும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆம்லா பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்ட இந்திய கடலோர காவல் படையின் சிறியரக விமானம் திங்கள்கிழமை இரவு மாயமானது. இந்த விமானத்தில் துணை கமாண்டன்ட்
நிலையிலான 3 அதிகாரிகள் பயணித்தனர். எனவே, காணாமல் போன விமானத்தையும், அதில் பயணித்த 3 அதிகாரிகளையும் தேடும் பணி திங்கள்கிழமை இரவில் தொடங்கியது.
பல்வேறு கட்ட விசாரணைகளுக்குப் பின்னர் காணாமல் போன விமானம் கடலூர் மாவட்டத்தில், கடலூருக்கும் சிதம்பரத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் விழுந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இதனால் கடலூர் மாவட்டத்தில் கடலுக்குள்ளும், கடலோரம் மற்றும் அடர்ந்த காட்டுப் பகுதியிலும் தமிழக கடலோர பாதுகாப்புப் படை குழுமத்தினர், தமிழக போலீஸார், சுங்கத் துறையினர் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
மேலும், மாவட்டத்திலிருந்து மீன்பிடிக்க கடலுக்குள் சென்ற மீனவர்களிடமும் விமானம் குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது.
இப்பணியில் கடலின் ஆழத்துக்குள் சென்று பார்க்கும் ஸ்கூபா டைவிங் வீரர்கள், கடலின் குறிப்பிட்ட மேற்பரப்பில் ஆய்வு செய்யும் பாராமோட்டார், மணற்பாங்கான பகுதியில் செல்லும் ஏ.டி.வி. வாகனம் மற்றும் ஆழ்கடலில் 10 கப்பல்கள், இந்திய விமானப்படை விமானங்கள் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், புதிய முயற்சியாக ஒலி அலைகள் மூலமாக விமானத்தைத் தேடும் பணியில் தமிழக கடலோர பாதுகாப்புப் படை குழுமத்தினர் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
மீன்பிடி படகில் குழுமத்தின் கடலூர் ஆய்வாளர் ர.சேகர் தலைமையில் ஈரோட்டைச் சேர்ந்த பி.எல்.ஓ.வி.ஐ.ஏ. கணினி நிறுவனத்தின் முதன்மை அலுவலர் என்.சிபிதரண் இப்பணியில் ஈடுபட்டார்.
இதற்காக கடலூர் துறைமுகத்திலிருந்து 50 கடல் மைல் தொலைவுக்கு படகில் சென்றனர். அங்கு கணினி மூலமாக தேடுதல் பணி நடந்தது.
இதுகுறித்து என்.சிபிதரண் கூறியதாவது: ஒவ்வொரு விமானத்திலும் ஏ.டி.எஸ்.பி. என்ற கருவி பொருத்தப்பட்டிருக்கும்.
அந்தக் கருவியிலிருந்து வெளியேறும் ஒலியை பிரதிபலிக்கும் வகையில் எங்களது நிறுவனம் மூலம் ஏ.டி.எஸ்.பி. ட்ரேசிங் ப்ரோகிராம் என்ற புதிய மென்பொருளை உருவாக்கியுள்ளோம். அதன்மூலமாக அந்த விமானம் எத்தனை கி.மீ. வேகத்தில் செல்கிறது, அதன் "யூனிக்' முகவரி ஆகியவற்றை அறியலாம்.
கடலூர், கடல் பகுதியில் 6 மணி நேரம் ஆய்வு செய்ததில் சென்னை, பெங்களூரு விமான நிலையங்களிலிருந்து புறப்பட்ட 24 விமானங்களின் சிக்னல் கிடைத்தது. ஆனால் காணாமல் போன "டார்னியர்' விமானத்திலிருந்து எந்தவிதமான சிக்னலும் கிடைக்கவில்லை.
இதற்குக் காரணம் அந்த விமானத்திலுள்ள ஏ.டி.எஸ்.பி. கருவி செயலிழந்தோ அல்லது அதற்குத் தேவையான மின்சாரம் கிடைக்காமலோ இருந்திருக்கலாம்.
எனினும், கணினியில் பதிவான விவரங்களை மேலும் ஆய்வு செய்து அதில் ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் தேடுதல் பணியில் ஈடுபடுவோம். அடுத்தக் கட்டமாக நாகப்பட்டினம் கடல் பகுதியில் இந்த ஆய்வை மேற்கொள்ள உள்ளோம் என்றார்.
முந்திரிக் காடுகளில் தேடுதல் வேட்டை: கடல் பகுதியில் விமானம் குறித்த தகவல்கள் ஏதும் கிடைக்காததால் கடலூர் மாவட்டத்தை ஒட்டி அமைந்துள்ள பல்லாயிரக்கணக்கான ஏக்கர் முந்திரிக்காடுகளிலும், பிச்சாவரம் புன்னை வன காடுகளிலும் விமானம் விழுந்திருக்கலாம் என்ற கருத்தும் பரிசீலிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத கடலூர், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, பண்ருட்டி பகுதியிலுள்ள முந்திரிக் காடுகளில் காவல் துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல, கடலோர கிராமங்கள் மற்றும் முந்திரிக் காடுகள் நிறைந்த கிராமப் பகுதிகளில் விமானம் குறித்து தகவல் அறிந்தால் உடனே தெரிவிக்குமாறு தண்டோரா போட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.









0 கருத்துகள்:
கருத்துரையிடுக