சனி, 25 ஏப்ரல், 2015

பரங்கிப்பேட்டை கோவில் அருகே கைப்பற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் செயலிழக்க செய்யப்பட்டன

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை  அருகே பெரியகுமட்டி கோவில் அருகே கைப்பற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் செயலிழக்க செய்யப்பட்டன.

சிதம்பரம்–கடலூர் சாலையில் பரங்கிப்பேட்டை அருகே பெரியகுமட்டி கிராமத்தில் கிளியாளம்மன் கோவில் உள்ளது. இதன் பின்புறம் உள்ள ஈச்சங்காட்டில் கடந்த 17–ந் தேதி நாட்டு வெடிகுண்டுகள் கிடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார், சப்–இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வி கடலூர் மாவட்ட வெடிகுண்டு நிபுணர் பாபு தலைமையிலான குழுவினர் விரைந்து சென்று, ஈச்சங்காட்டில் வெள்ளை நிற நூள் சுற்றிய நிலையில் கிடந்த 3 நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றினர். பின்னர் மணல் நிரப்பிய ஒரு பிளாஸ்டிக் வாளியில் அதை போட்டனர்.

மேலும் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். ஆனால் வேறு எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து கைப்பற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் பெரியகுமட்டி கிராமத்தில் வாணவெடி செய்யும் ஒரு குடோனில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
இந்த வெடிகுண்டுகளில் வெடிக்கும் சக்தி இருக்கிறதா? என்பது பற்றி ஆய்வு செய்து, அதை செயலிழக்க செய்ய சென்னையில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அதன்பேரில் சென்னை அடையாறு மருதம் பகுதியை சேர்ந்த வெடிகுண்டு நிபுணர் பக்தவச்சலம் தலைமையில் சப்–இன்ஸ்பெக்டர் முருகன், பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார், சப்–இன்ஸ்பெக்டர்கள் பாண்டிசெல்வி, கண்ணுசாமி, அண்ணாமலை ஆகியோர் பெரியகுமட்டி வாணவெடி குடோனில் வைத்திருந்த நாட்டு வெடி குண்டுகளை நவீன கருவி மூலம் ஆய்வு செய்தனர். இதில் வெடிக்கும் நிலையில் உள்ள குண்டுகள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து 3 குண்டுகளையும் பாதுகாப்பாக வெடிக்க செய்ய முடிவு செய்யப்பட்டது. வெடி குண்டு பிரிவு சப்–இன்ஸ்பெக்டர் முருகன், பாதுகாப்பு உடை அணிந்து 3 வெடிகுண்டுகளையும் அருகில் உள்ள பெரிய பள்ளத்தில் வைத்தார். அதில் மின்சாரம் செலுத்துவதற்கான ஒயர் இணைக்கப்பட்டது.
வெடிகுண்டு வைத்த இடத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் சுற்றளவுக்கு பொதுமக்கள் யாரும் வராதபடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதன்பின்னர் 200 அடி தொலைவில் இருந்து வெடிகுண்டு நிபுணர் குழுவினர் மின்சாரம் செலுத்தினர். அப்போது 3 நாட்டு வெடிகுண்டுகளும் ஒரே நேரத்தில் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதிலிருந்து கிளம்பிய புகையால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது.

வெடித்த குண்டுகளில் இருந்து சிறிய அளவிலான ஆணிகள், சைக்கிள் சக்கரத்தில் பயன்படுத்தும் பால்ரஸ் குண்டுகள், கண்ணாடி துகள்கள் அப்பகுதியில் சிதறி கிடந்தது. இதை போலீசார் சேகரித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கைப்பற்றப்பட்டு சில நாட்கள் கழித்த நிலையில் 3வெடி குண்டுகளையும் பதுக்கி வைத்தது யார் இதுவரை யாரையம் கைது செய்தார்களா  என்ற எந்த காரணத்தையும் இதுவரை காவல் துறை இடம் இருந்து எந்த தகவலும் இல்லை ஊடகங்கலளிலும்  இதை பற்றிய எந்த ஒரு தகவலும் இல்லை

0 கருத்துகள்:

கருத்துரையிடுக