வெள்ளி, 19 டிசம்பர், 2014

அரவிந்தர் ஆசிரமத்திற்கு எதிராக தொடரும் போராட்டம்: புதுச்சேரியில் நாளை பந்த்!

புதுச்சேரி:புதுவை அரவிந்தர் ஆசிரமத்தில் தங்கியிருந்து சேவை செய்து வந்த பெண்கள்  ஆசிரமத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட  விரக்தியில்   ஐந்து பெண்கள் உட்பட ஏழுபேர் நேற்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இதில் அருணாஸ்ரீ, ராஜஸ்ரீ மற்றும் அவர்களது தாய் ஆகியோர் இறந்தனர். மற்றவர்கள் காப்பாற்றப்பட்டனர்.

புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் தங்கியிருந்து சேவை செய்து வந்த இவர்களின் தற்கொலைக்கு ஆசிரமத்தின் பாலியல் ரீதியாக தொல்லைகளும், நெருக்கடிகளும்தான் காரணம் என புதுச்சேரியின்
தமிழர் அமைப்புகளும், கட்சிகளும், ஆசிரமத்திற்கெதிரான போராட்டத்தில் இறங்கியது. இதில் அரவிந்தர் ஆசிரமம், ஆசிரம பெட்ரோல் பங்க், ஆசிரம பல்பொருள் அங்காடி ஆகியவை அடித்து நொறுக்கப்பட்டது.


இதையடுத்து மூன்று பேர் தற்கொலைக்குக் காரணமான ஆசிரமத்தினை மத்திய, மாநில அரசுகள் கையகப்படுத்தி ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியைக் கொண்டு நிர்வகிக்க வேண்டுமென்றும், அதுவரை ஆசிரமத்திற்கு சீல் வைக்க வேண்டுமெனவும், சகோதரிகளின் தற்கொலை குறித்து ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டுமென்றும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் நாளை முழு அடைப்பு நடத்தப் போவதாக அறிவித்திருக்கின்றது. மேலும், சினிமா காட்சிகள் நாளை ரத்து செய்யப்பட்டுவதாக திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.



இரண்டாம் நாளான இன்றும் ஆசிரமத்திற்கெதிரான போராட்டம் தீவிரமாக தொடர்வதால், ஆசிரமத்திற்கு சொந்தமான பெட்ரோல் பங்க், கைவினைத் தொழிற்சாலை உள்ளிட்ட நிறுவனங்கள் பாதுகாப்புக் கருதி இன்று மூடப்பட்டிருக்கின்றது. இன்று காலையும் பல்வேறு அமைப்புகள் ஆசிரமத்தை முற்றுகையிட்டு ஆசிரம நிர்வாகத்தைக் கண்டித்து கோஷம் எழுப்பினர்.

அதேபோன்று இலாசுப்பேட்டையில் இருக்கும் அரசு பெண்கள் தொழில்நுற்பக் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் ஆசிரம நிர்வாகத்தைக் கண்டித்தும், கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் என இயங்கும் அரவிந்தர் ஆசிரமத்தை மத்திய அரசு கையகப்படுத்த வேண்டுமென்றும், அங்கிருப்பவர்கள் அனைவரும் உடனே வெளியேற வேண்டுமென்றும் வலியுறுத்தியும் கிழக்கு கடற்கரை சாலையில் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் கிழக்கு கடற்கரை சாலையில் சிறிது போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தற்கொலை செய்து கொள்ளப் போகும்போது நான்கு பேர் கொண்ட கும்பலால் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக ஹேமலதா என்பவர் புகார் கொடுத்தார். அந்த புகாரின்பேரில் இன்று காலாப்பட்டு காவல்துறையினர் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்கள் மீது  வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பல்வேறு அரசியல் கட்சிகளும் தலைவர்களும் இந்த தற்கொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இன்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் வைத்தியலிங்கம், நாளை நடக்க இருக்கும் முழு அடைப்புப் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்கிறது என்றும், புதுச்சேரியில் ரங்கசாமி தலைமையிலான அரசு செயலிழந்துவிட்டது என்றும் குற்றம்சாட்டினார்.
அதேபோல் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அ.தி.மு.க முன்னாள் செயலாளர் எம்.எல்.ஏ அன்பழகன், இந்த தற்கொலை சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை வேண்டுமென்றும், புதுச்சேரி காவல்துறை இந்த விஷயத்தில் சரியாக செயல்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

மேலும் அ.தி.மு.க சார்பில் ஏற்கனவே இந்த விஷயத்தின் மீது சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டதாகவும், ஆனால் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

இந்நிலையில் ஆசிரம நிர்வாகத்தைக் கண்டித்து இடதுசாரிகளும் நாளை தனியாக முழு அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. 

இதனிடையே, புதுச்சேரியில் நாளை நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் ஜூன் 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுவதாக மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.

புதுச்சேரியில் அனைத்துக் கட்சிகளும் ஆசிரமத்திற்கு எதிராகப் போராட்டத்தில் இறங்கியிருப்பது புதுச்சேரியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக