புதன், 14 மே, 2014

பரங்கிப்பேட்டை பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகம் பொதுமக்கள் கடும் அவதி


பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை ஒன்றிய பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வெளியில் தலைகாட்ட முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.
பரங்கிப்பேட்டை மற்றும் கிள்ளை பகுதிகளில் கோடை வெயில் துவங்கும் முன்பே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் வெயில் தாக்கத்தில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள இளநீர், தர்பூசணி, எலுமிச்சை ஜூஸ் போன்ற குளிர்ச்சியான பொருட்களை வாங்கி சாப்பிட்டு வந்தனர்.
இந்நிலையில் அக்னி நட்சத்திரம் துவங்கிய நாளில் இருந்து தொடர்ந்து மூன்று நாட்கள் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாக உள்ளது. இரவு நேரங்களிலும் உஷ்ணம் அதிகமாக இருப்பதால் இரவில் துாங்க முடியாமல் குழந்தைகள், நோயாளிகள் கடும் அவதிப்படுகின்றனர்.தினமும் காலை 10 மணிக்குமேல் துவங்கும் வெயிலின் தாக்கம் மாலை 5:30 மணி வரை நீடிக்கிறது. இதனால் வெளியில் நடந்து செல்லுபவர்கள், இருசக்கர வாகனம் மற்றும் சைக்கிளில் செல்பவர்களுக்கு உடம்பு முழுவதும் எரிச்சல் அதிகமாகிறது. பொதுமக்கள், நோயாளிகள் வெளியில் தலைக்காட்ட முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.
பரங்கிப்பேட்டை, கிள்ளை கடற்கரையோர பகுதிகளில் ஓரளவு காற்று வீசுவதால் மீனவர்கள் கடற்கரையோரம் சென்றுவிடுகின்றனர். கிராம பகுதிகளில் இருந்த மரங்கள் தானே புயலின்போது விழுந்துவிட்டதால் கடற்கரை பகுதியைவிட கிராம பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக