இடிந்தகரை :நெல்லை மாவட்டம் இடிந்தகரை புனித லூர்து தேவாலயத்துக்கு உட்பட்ட பகுதியில் கூரை வேய்ந்த இடம். அணுஉலைக்கு எதிரான போராட்டக்காரர்களுக்கு இந்த இடம் ஒரு புனித ஸ்தலமாகிவிட்டது என்றால் அது மிகையாகாது.
3 வருடங்களுக்கு முன்னர் ஜப்பான் நாட்டின் புகுஷிமா அணுஉலை நிலநடுக்கதால் பாதிக்கப்பட்டு கதிரிவீச்சு வெளியேறியதைத் தொடர்ந்து கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான அறப்போராட்டம் இடிந்தகரையில் துவங்கியது.
இடிந்தகரையில் தொடர் போராட் டம் கடந்த 2011-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. நீண்ட நாட்களாக அறவழியில் நடக்கும் இந்த போராட்டம் ஞாயிற்றுக்கிழமை மற்றுமொரு மைல்கல்லை எட்டியது. அது தான் அறப்போராட்டத்தின் 1000-வது நாள்.
அணுசக்திக்கு எதிரான மக்கள் பேரியக்கத்தின் 1000-வது நாளில் போராட்டக்காரர்கள் அதே உத்வேகத்துடன், இன்னும் அதிக முனைப்புடன் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி கோஷங்கள் எழுப்பியவாறு தங்கள் போராட்டத்திற்கு வலு சேர்த்துக் கொண்டிருந்தனர்.
கூடங்குளம் அணுஉலை முற்றிலுமாக மூடப்படும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்பதில் மட்டும் உறுதியாக இருக்கிறார் அணுசக்திக்கு எதிரான மக்கள் பேரியக்கத்தின் தலைவரும், ஆம் ஆத்மி கட்சி கன்னியாகுமரி தொகுதி வேட்பாளருமான எஸ்.பி.உதயகுமார்.
ரஷ்ய நாட்டு உதவியுடன் கூடங்குளத்தில் அமைக்கப்பட்ட 1000 மெ.வாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட அணுஉலைகளில் முதல் அணுஉலையில் இதுவரை 900 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
2011 ஆகஸ்ட்டில் இடிந்தகரையில் கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக போராட்டம் துவங்கியதில் இருந்து அரசியல் கட்சிகளின் ஆதரவு போராட்டத்திற்கு பெருகி வந்தது. பல்வேறு தொண்டு நிறுவனங்களும் தங்கள் ஆதரவை தெரிவித்தன.
அறவழியில் போராடும் இயக்கதினரை அடக்குவது அறியாமல் போலீசாரும் மீனவ கிராமமான இடிந்தகரைக்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டினர். போராட்டக்காரகளுக்கு எதிராக 349 வழக்குகளை பதிவு செய்த போலீஸார் ஏதோ காரணத்தால் கைது நடவடிக்கையில் ஈடுபடவில்லை. இப்படியாக இடிந்தகரை போராட்டம் 1000-வது நாளை கடந்துள்ளது.
1000-வது நாளை ஒட்டி இடிந்தகரையில் நடந்த கூட்டத்தில் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் எம்.பி.ஜேசுராஜ், எம்.புஷ்பராயன், ஆர்.எஸ்.முகிலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க மத்திய மாநில அரசுகளும், உச்ச நீதிமன்றமும் தயாராக இல்லாத காரணத்தால் தங்களது போராட்டம் அணுஉலை திட்டம் கைவிடப்படும் வரை தொடரும் என தெரிவித்தனர்.
பின்னர் பேசிய அணுஉலை எதிர்ப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.உதயகுமாரும் அணுஉலை திட்டம் கைவிடப்படும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தார். பின்னர் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தப்பட்டது.











0 கருத்துகள்:
கருத்துரையிடுக