நெய்வேலி :நெய்வேலி என்.எல்.சி. பங்குகளை தமிழக அரசுக்கு வழங்குவது என்ற அறிவிப்பு வெளியானதை அடுத்து 13 நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்று, நேற்று மாலை 7 முதல் பணிக்கு திரும்பினார்கள்.கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்கப்போவதாக மத்திய அரசு அறிவித்தது. இம்முடிவை எதிர்த்து அங்கீகரிக்கப்பட்ட தொ.மு.ச., அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட 17 தொழிற்சங்க கூட்டமைப்பை சேர்ந்த சுமார் 27 ஆயிரம் தொழிலாளர்கள் கடந்த 3–ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.. மேலும் கடந்த 3 நாட்களாக தொடர் உண்ணாவிரதமும் மேற்கொண்டனா. அவர்களுக்கு ஆதரவாக அனைத்து அரசியல் கட்சியினரும் என்.எல்.சி. பங்கு விற்பனைக்கு எதிர்ப்புக் குரல் எழுப்பினர்.
இந்த சூழ்நிலையில் என்.எல்.சி.யின் பங்குகளை தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு விற்பனை செய்யலாம் என்று யோசனை தெரிவித்து பிரதமருக்கு தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார்.
இதற்கு பங்கு பரிவர்த்தனை வாரியமானது(செபி) ஒப்புதல் தெரிவித்து கடந்த 7–ந்தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதன் தொடர்ச்சியாக நேற்று மும்பையில் மத்திய அரசு அதிகாரிகளுடன் தமிழக அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள்.
அதில் 5 சதவீத பங்குகளை தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்க, மத்திய அரசுக்கு செபிக்கு அதிகாரபூர்வமாக ஒப்புதல் அளித்தது. இந்த அறிவிப்பை அறிந்த என்.எல்.சி. தொழிலாளர்கள் உற்சாகமடைந்தனர்..
இதை அடுத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் கடந்த 13 நாட்களாக ஈடுபட்டு வந்த வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக நேற்று மாலை அறிவித்தனர். அதை தொடர்ந்து 3 நாட்கள் நடந்த உண்ணாவிரத போராட்டத்தையும சி.ஐ.டி.யூ. மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் முடித்து வைத்தார்.இதை தொடர்ந்து என்.எல்.சி. தொழிலாளர்கள் நேற்று இரவு 7 மணிக்கு 2–ம் கட்ட பணிக்குசெல்வதாக அறிவித்து பணிக்கு திரும்பினர். அதுபோல் 10 மணிக்கான பணிக்கும் தொழிலாளர்கள் சென்றனர்.
இது தொடர்பாக தொ.மு.ச. பொதுச்செயலாளர் ராசவன்னியன் கூறியதாவது:–
என்.எல்.சி. நிறுவனத்தின் 5 சதவீத பங்கு விற்பனையை அறிவித்த மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் வேலைநிறுத்தம் மற்றும் உண்ணாவிரதம் போராட்டங்களை அறிவித்து நடத்தி வந்தோம்.
கடந்த 3–ந்தேதி வரை நம்மோடு இருந்த பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கத்தினர் நீதி மன்றத்தின் தீர்ப்பை காரணம் காட்டி பணிக்கு சென்றனர். ஆனால் அங்கு அவர்கள் தங்களது பணியை மட்டுமின்றி தொழிலாளர்களும், ஒப்பந்த தொழிலாளர்களும் செய்யவேண்டிய பணிகளையும் சேர்த்து செய்து நிறுவனத்தின் மின் உற்பத்தியை குறைய விடாமல் பார்த்துக்கொண்டார்கள்.
இதன் காரணமாக எங்களது போராட்டத்தின் வலிமையை மத்திய அரசு உணர காலதாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் என்.எல்.சி. பங்குகளை தமிழக அரசு, வாங்கிக்கொள்ள முடிவு செய்து பிரதமருக்கு தமிழக முதல்–அமைச்சர் எழுதிய கடிதத்துக்கும் மத்திய அரசு எந்த பதிலும் சொல்லாமல் மவுனம் காத்தது.
தமிழகத்தின் முன்னாள் முதல்–அமைச்சர் கருணாநிதியும், என்.எல்.சி. நிறுவன பங்குகளை தமிழக அரசிற்கு விற்கலாம் என்று ஆதரவு தெரிவித்த பின்னர் கூட, மத்திய அரசு தனது முடிவை தெரிவிக்காமல் இருந்த்து..
. இந்த நிலையில், மத்திய அரசு என்.எல்.சி.யின் பங்குகளை தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனத்திற்கு விற்க செபி ஒப்புதல் அளித்தள்ளதாக அறிவிப்பு வந்தள்ளது. இதன் மூலம் என்.எல்.சி. தொழிலாளர்கள் கட்சி, தொழிற்சங்க வேறுபாடின்றி ஒன்றாக இணைந்து நடத்திய போராட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது. இதையடுத்து எங்களது வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம். எனவே அனைத்து தொழிலாளர்களும் வழக்கம் போல் உடனடியாக பணிக்கு செல்ல வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். எதிர்காலத்தில் இதேபோன்ற நிலை வரும்போது நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடி வெற்றி பெறுவோம்.இவ்வாறு ராசவன்னியன் தெரிவித்தார்.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக