கடலூர்:""விவசாயத்தை விட்டு விவசாயிகள் வெளியேறும் நிலையை மத்திய
அரசு உருவாக்கி வருகிறது'' என, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர்
பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ., கூறினார்.அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 33வது மாநாடு, கடலூரில், வரும் 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடக்கிறது. மாநாட்டில் பல பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
மத்திய அரசின் போக்கினால் பன்னாட்டு கம்பெனிகளுக்கு விவசாயம் முழுவதும் ஒப்படைக்கின்ற நிலைமை ஏற்படும். விளை நிலங்களை ரியல் எஸ்டேட், தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்யும் நிலை உள்ளது. விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டத்தின் மூலம் தாமாகவே வெளியேறும் நிலையை மத்திய அரசு ஏற்படுத்தி வருகிறது.
விளை நிலங்கள் குறைந்து உணவு உற்பத்தியும் குறைந்துவிட்டது. சீனாவில் ஒரு ஹெக்டேர் நிலத்தில் 200 டன் கரும்பு விளைவிக்கின்றனர். இந்தியாவில் 70 முதல் 80 டன் கரும்பு உற்பத்தி செய்யப்படுகிறது. போதிய வருவாய் கிடைக்காததால் இளைஞர்கள் விவசாயம் செய்ய முன் வருவதில்லை. விவசாயி தனது மகனை விவசாயம் அல்லாத தொழிலுக்கு அனுப்பும் நிலை உள்ளது. காரணம், விவசாயத்தில் லாபம் இல்லாததுதான்.
வங்கிகள், விவசாயத்திற்காக கடன் கொடுப்பதில்லை. தமிழகத்தில் 48 சதவீதம் தான் பாசன வசதி நிலங்கள் உள்ளன. 52 சதவீதம் வானம்பாத்த பூமியாகவே உள்ளன. விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறை குறித்து இம் மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.
இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறினார். மருதவாணன், ரவிச்சந்திரன், மாதவன் உடனிருந்தனர்.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக