செவ்வாய், 16 ஜூலை, 2013

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி இடிந்தகரையில் மக்கள் பெருந்திரள் போராட்டம்!

நெல்லை:கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடவலியுறுத்தி இடிந்தகரையில் திங்கள்கிழமை மாலை பெருந்திரள் மரணப் போராட்டத்தை மக்கள் நடத்தினர். திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட கடற்கரைக் கிராமங்களில் மீனவர்கள் கருப்புக் கொடியேற்றி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். கூடங்குளம் அணுஉலையை மூடவலியுறுத்தி இடிந்தகரையில் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் கடந்த 700 நாள்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அணுமின் நிலையத்தில் கடந்த 13-ஆம் தேதிமுதல் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. இதைக் கண்டித்தும், அணுஉலையை மூடவலியுறுத்தியும் இடிந்தகரையில் பெருந்திரள் மரணப் போராட்டம் நடைபெற்றது.கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி, அணுஉலை செயல்படுவதால் இனி தாங்கள் செத்து விழுவோம் என்பதை உலகுக்கு வெளிக்காட்டும்விதமாக இந்தப் பெருந்திரள் மரணப் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர். இடிந்தகரை ஊருக்குள் நுழையும் பகுதியிலிருந்து ஊர்வரையிலும் பெண்களும் ஆண்களும் இறந்து விழுந்தது போன்று படுத்திருந்தனர். மாலை 4.30 மணிக்கு தொடங்கிய இந்தப் போராட்டம் 5.20 மணிக்கு முடிவடைந்தது. இப்போராட்டத்தில் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் எஸ்.பி.உதயகுமார், புஷ்பராயன் மற்றும் திரளான பெண்களும், ஆண்களும் கலந்துகொண்டனர். முன்னதாக, கூட்டப்புளியில் கிராம மக்கள் கருப்புக் கொடி ஏற்றி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கூத்தங்குழி, தோமையார்புரம், பெருமணல் கிராமங்களிலும் கருப்புக் கொடி ஏற்றியிருந்தனர்.கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. உவரி கிராமத்திலும் கிராம மக்கள் கருப்புக் கொடியேற்றி ஆர்ப்பாட்டம் நடத்தினர். கூடங்குளம் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் பெரியதாழை, கூடுதாழை, வீரபாண்டியன்பட்டணம், மணப்பாடு உள்ளிட்ட மீனவ கிராமங்களில் மீனவர்கள் திங்கள்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. மேலும், தூத்துக்குடி இனிகோநகர், திரேஸ்புரம் ஆகிய பகுதிகளில் கருப்புக் கொடி ஏற்றி மீனவர்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். பனிமய மாதா பேராலய திருவிழா ஜூலை 26-ஆம் தேதி தொடங்குவதால் விசைப்படகுகள் அனைத்தும் திங்கள்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றன. தூத்துக்குடி மாநகரப் பகுதியையொட்டியுள்ள மீனவ கிராமங்களில் சில இடங்களில் மட்டுமே கருப்புக் கொடி ஏற்றப்பட்டிருந்தது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக