வியாழன், 18 ஜூலை, 2013

பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி புதுவையில் லாரி ஸ்டிரைக் ரூ. 80 கோடி வர்த்தகம் பாதிப்பு

புதுச்சேரி: புதுவை மேட்டுப்பாளையத்தில் கனரக போக்குவரத்து முனையம் கடந்த 2008ல் அமைக்கப்பட்டது. இங்கு, லாரிகளை நிறுத்த போதிய பாதுகாப்பு, சரக்கு பெட்டகம், புக்கிங் ஏஜென்ட் அலுவலகம், டிரைவர்கள் தங்குவதற்கு கட்டிடம் உள்ளிட்ட வசதிகள் இல்லை. இதனால் லாரிகள் அங்கு நிறுத்தப்படுவது இல்லை. புதுவை&திண்டிவனம் நெடுஞ்சாலை, தட்டாஞ்சாவடி, கோரிமேடு உள்ளிட்ட சாலை ஓரங்களில் லாரிகளை நிறுத்தி வருகின்றனர்.

மேட்டுப்பாளையத்தில் லாரிகள் நிறுத்துவதற்கென அமைக்கப்பட்ட முனையத்தில் உரிய அடிப்படை மற்றும் பாதுகாப்பு வசதிகள் செய்து தரக் கோரி லாரி உரிமையாளர்கள் புதுச்சேரி அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இக்கோரிக்கைகளை வலியுறுத்தும் விதமாக புதுவை லாரி உரிமையாளர் மற்றும் முன்பதிவு முகவர்கள் சங்கங்கள் சார்பில் இன்று (17ம் தேதி) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இப்போராட்டத்திற்கு அகில இந்திய தென்மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம், தமிழ்நாடு தரைவழி போக்குவரத்து கூட்டமைப்பு, அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் உள்ளிட்ட சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. அவர்கள், புதுச்சேரிக்கு லாரிகளை இயக்க போவதில்லை என அறிவித்தனர். அதன்படி, கடந்த 15ம் தேதி முதல் புதுச்சேரிக்கு சரக்குகள் பதிவு செய்வதையும் நிறுத்தின.

இந்த நிலையில், போராட்டத்தை கைவிடக்கோரி புதுச்சேரி போக்குவரத்து ஆணையர் சுந்தரேசன், லாரி உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன் நேற்று மாலை பேச்சுவார்த்தை நடத்தினார். இது தோல்வியில் முடிந்ததால் திட்டமிட்டபடி லாரிகள் ஸ்டிரைக் இன்று தொடங்கியது. புதுச்சேரியில் இருந்து தினமும் வந்து செல்லும் 1,500 லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. புதுச்சேரியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்கள் ஏற்றி வருவதும், இங்கு உற்பத்தியாகும் பொருட்கள் வெளிமாநிலங்களுக்கு ஏற்றி செல்வதும் தடைபட்டுள்ளது. லாரிகள் ஸ்டிரைக்கால் புதுவையில் ரூ.80 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக