பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை மற்றும் பிச்சாவரம் சுற்றுலா வனப்பகுதிகளில் சுற்றுலா மேம்பாடு குறித்தும், விரிவாக்கப் பணிகள் மேற்கொள்வது குறித்தும் இரு அமைச்சர்கள் மற்றும் சுற்றுலா வாரியக் கழகத் தலைவர் ஆகியோர் அதிகாரிகளுடன் சென்று புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.சண்முகநாதன், எம்.சி.சம்பத், தமிழக சுற்றுலா வாரியக் கழகத் தலைவர் ஏ.அருண்மொழிதேவன், ஆட்சியர் ஆர்.கிர்லோஷ்குமார் ஆகியோர் சாமியார்பேட்டை கடற்கரை, கிள்ளை முழுக்குத்துறை, எம்ஜிஆர் திட்டு பிச்சாவரம் ஆகிய பகுதிகளைப் பார்வையிட்டு சுற்றுலா மேம்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் பிச்சாவரம் சுரபுண்ணைக் காடுகளை படகுசவாரி செய்து பார்வையிட்டனர்.
அமைச்சர்களுடன் முன்னாள் அமைச்சர் கே.கே.கலைமணி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன் (சிதம்பரம்), செல்விராமஜெயம் (புவனகிரி), நாக.முருகுமாறன் (காட்டுமன்னார்கோவில்), தமிழழகன் (திட்டக்குடி), கிள்ளை பேரூராட்சித் தலைவர் எஸ்.வித்யாதித்தன், தமிழ்நாடு சுற்றுலாத் துறை உதவி இயக்குநர் காமராஜ், மக்கள் - தொடர்பு அதிகாரி கு.தமிழ்செல்வராஜன், சிதம்பரம் சுற்றுலா அலுவலர் (பொறுப்பு) திருவாசன், பிச்சாவரம் சுற்றுலா மைய மேலாளர் உதயகுமார் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
பரங்கிபேட்டையில் ரூ.1 கோடியில் படகுகுழாம் புதுப்பிக்கப்படவுள்ளது. மேலும் ரூ.90.83 லட்சம் செலவில் பிச்சாவரத்தில் முழுக்குத்துறை மற்றும் எம்ஜிஆர் திட்டு பகுதியில் படகு குழாம் அமைக்கவும், பிச்சாவரத்தில் ரூ.28.23 லட்சம் செலவில் சிறுவர்பூங்கா, நீரூற்று பூங்கா, பார்க்கிங் வசதி அமைக்கவும், ரூ.20 லட்சம் செலவில் மீன்அருங்காட்சியகம் அமைக்கவும், வீராணம் ஏரி தெற்கு நீர் திறக்கும் பகுதியில் ரூ.89 லட்சம் செலவில் சிறுவர் பூங்கா அமைக்கவும் திட்டமதிப்பீடு செய்யப்பட்டு அரசின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேற்கண்ட பணிகள் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.










0 கருத்துகள்:
கருத்துரையிடுக